Wednesday, May 19, 2010

நாழிச்சிறு சலங்கை

32

நாழி சிறு சலங்கை
நல்லபவுன் பொன்சலங்கை

ஒழக்கு சிறு சலங்கை
ஒசந்த பவுன் பொன்சலங்கை

பதக்கு சிறு சலங்கை
பழைய பவுன் பொன்சலங்கை

வெள்ளி சிறு சலங்கை
வெலை மதியா வீரதண்டே

சொல்லிச் சமையுதங்கே
சோழரோட வீரதண்டே

பண்ணிச் சமையுதங்கே
பாண்டியனார் வீரதண்டே

ஆருக்கிடுவோமுன்னு
தேடித்திரிகையிலே

எனக்கிடுங்கள் என்று சொல்லி
எதிர் கொண்டு வந்தா(ளோ)னோ

தனக்கிடுங்கள் என்று சொல்லி
தானோடி வந்தா(ளோ)னோ

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ

5 comments:

Ramprasath said...

ஆனந்த விகடன் உங்கள் தளத்தைப் பரிந்துரைத்துள்ளது. வாழ்த்துகள்.


”இன்றைய தலைமுறையினரிடம் மறைந்து வரும் தாலாட்டுகளை மலரும் நினைவுகளாக இங்கே மறுபதிவு செய்கிறேன். என் தாயார், மாமியார் மற்றும் உறவினர்களின் வழி எனக்கும் கிடைத்த வரம் இந்த அற்புதத் தாலாட்டுகள்' என்று வலைப்பூவின் முகப்பு சொல்கிறது. ஒரு குழந்தை முதலில் கேட்கும் இசை வடிவமான தாலாட்டினைக் கிட்டத்தட்ட தொலைத்துவிட்ட இந்நாளில், 'சங்கு முழங்க என் கண்ணே! சமுத்திரத்தில் மீன் முழங்க, எங்கே முழங்குதுன்னு சாமி ஏணிவெச்சுப் பார்த்தாராம்'; 'எங்கிருந்தான் எங்கிருந்தான், இது நெடுநாள் எங்கிருந்தான், மாசி மறைஞ்சிருந்தான், மழைமேகம் சூழ்ந்திருந்தான், திங்கள் மறைஞ்சிருந்தான் தேவர்கள் கூடயிருந்தான்' என்று தமிழ் கொஞ்சி விளையாடும் பதிவுகள் கருப்பட்டி இனிப்பு!”

தமிழன்பன் said...

அங்கீகாரத்திற்கு வாழ்த்துக்கள்

meenamuthu said...

ராம்!!! இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறீர்கள்!நன்றி... நன்றி..!:))

meenamuthu said...

மனமுவந்த வாழ்த்திற்கு நன்றி. மகிழ்ச்சி தமிழன்பன்!

தக்குடு said...

பாசமான நகரத்தாரின் பக்குவமான தாலாட்டு வரிகள் பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் அக்கா! உன்னதமான பணியை செய்கிறீர்கள்!