Tuesday, April 20, 2010

சங்கு முழங்க...

31

சங்கு முழங்க என் கண்ணே
சமுத்திரத்தில் மீன் முழங்க

எங்கே முழங்குதுன்னு சாமி
ஏணி வச்சு பார்த்தாராம்

அடிக்கரும்பை வெட்டி
நடுக்கடலில் வில்லூணி

கருங்கடலில் வில்லூணி
கணபதியை கை தொழுது

செங்கடலில் வில்லூணி
சிவனாரை கை தொழுது

ராராரோ ராராரோ
ராரிரேரோ ராராரோ

வள்ளியம்மை தெய்வானை
மாறாத சண்டையினால்

தெய்வானை ஓடி வந்து
சீவிலியை சாட்சி வச்சா

வள்ளியம்மை ஓடி வந்து
மயில்தனையோ சாட்சி வச்சா

ஏங்கானூம் வேலவரே
இந்த மதி உந்தனுக்கு

தேம்பி அழுதாளாம்
தேன்மொழியால் தெய்வானை

போங்கானும் வேலவரே
பொன்மலைக்கு அப்பாலே

பொங்கி அழுதாளாம்
பூங்கொடியாள் வள்ளியம்மை

கல்லுமலைக்குள்ளிருந்து
கதிர்வேலர் ஓடி வந்தார்

கடுகளவும் பயம் வேண்டாம்
காத்திடுவேன் உங்களையே!

கண்ணான கண்ணே என்
கண்மணியே கண்ணுறங்கு

ராராரோ ராராரோ
ராரிரேரோ ராராரோ

Wednesday, April 14, 2010

நீண்ட வருடங்கள் கழித்து பிறந்த பிள்ளைக்கு

30

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிராரோ ராராரோ
எங்கிருந்தான் எங்கிருந்தான்
இது நெடுநாள் எங்கிருந்தான்

மாசி மறஞ்சிருந்தான்
மழமேகம் சூழ்ந்திருந்தான்
திங்கள் மறஞ்சிருந்தான்
தேவாக்கள் கூடருந்தான்

சிவனோடருகிருந்தான்
தேடியதால் இங்கு வந்தான்
மகாதேவர் கூடருந்தான்
மனவருத்தங்கண்டு வந்தான்

எங்கள் குடி மங்காகும்
எதித்த குடி ஏசாகும்
தங்கமணி பொற்கதவை
தாழ்திறக்க வந்தானோ

தாளால் கடுதாசி
தங்கத்தால் மைக்கூட்டு
பேனா புடிச்செழுத தம்பி
பொறந்து வந்த புனக்கிளியோ

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ