Saturday, March 29, 2008

ராரிக்கோ ராரி..

6

ராரிக்கோ ராரிமெத்தை
ராமருக்கோர் பஞ்சு மெத்தை
பஞ்சுமெத்தை மேலிருந்து ராமர்
பஞ்சாங்கம் பார்க்கையிலே
வயசு நூறுன்னு
வாசிச்சார் பஞ்சாங்கம்
எழுத்து நூறுன்னு
எழுதினார் பஞ்சாங்கம்

--------------
5

முத்தான முத்தோ நீ
மூவாக்கள் ஆண்ட முத்தோ
கோர்த்தநல் முத்தோ நீ
குறத்திகையில் தாழ்வடமோ
ஆராய்ந்தெடுத்த முத்தோ நீ
அடிக்கடலின் ஆணி முத்தோ

-------------------
4

ராராரோ ராரி ராரோ
என் கண்ணே ராரிரேரோ
ராராரோ
காஞ்சிபுரத்தெண்ணை
கண்ணைக் கரிக்கு முன்னு
சேலத்து எண்ணைக்கு அம்மான்
சீட்டெழுதி விட்டாரோ
காலையில ரயிலேறி
கல்கத்தா போயிறங்கி
கடைக்கி கடை பா..த்து
கல்லெளச்ச சங்கெடுத்து
சுத்தி சிகப்பு வச்சு
தூருக்கோ..ர் பச்சை வச்சு
வாய்..ய்க்கு வயிரம் வச்சு
வாங்கி வந்தார் அம்மானும்

------------
3

கண்ணான தம்பிக்கு
காதுகுத்தப் போறொமுன்னு
முன்னூறு வெத்திலையும் உனக்கு
மூத்த அம்மான் சீரு வரும்
நானூறு வெத்திலையும் உனக்கு
நடு அம்மான் சீரு வரும்
கல்க்கண்டும் சக்கரையும் உனக்கு
கடை அம்மான் சீரு வரும்
அள்ளிக் கொடுப்பார்
அருமையம்மான் காப்பரிசி
பிடித்துக் கொடுப்பார்
பெரியம்மான் காப்பரிசி

--------------------
2

பூவாய் உதித்தவனோ
புண்ணியத்தால் வந்தவனோ
அரும்பாய் உதித்தவனோ
அருந்தவத்தால் வந்தவனோ
காணிக்கை கொடுத்து
கடைத்தெருவே போகையிலே
மாணிக்கம் என்று சொல்லி
மடிப்பிச்சை தந்தாரோ

-----------------
1

ஏழுகடல் நீந்தி
எடுத்து வந்த தாமரைப் பூ
பத்து கடல் நீந்தி
பறிச்சு வந்த
தாமரைப் பூ
அனைச்சு மனமகிழ
அள்ளி வந்த தாமரைப் பூ
கொஞ்சி மனமகிழ
கொண்டுவந்த தாமரைப் பூ