Friday, March 20, 2009

வள்ளி தாலாட்டு 2

குமரக்கிழவர்!

நல்ல கிழவனைப்போல் சுப்பையா
நடிச்சாராம் தினைப்புனத்தே
மெத்தப் பசிக்கிதுன்னு சுப்பையா
வித்தை பல செய்தாராம்

தேனும் தினைமாவும் வள்ளி
சேத்துக் கொடுத்தாளாம்
தாகமெடுக்குதுன்னு சுப்பையா
சாலங்கள் செய்தாராம்

தேன் குடிக்கத் தந்தாளாம்
தேன்மொழியா வள்ளியம்மை
அதையும் குடிக்காம சுப்பையா
அழைச்சாராம் சுனையருகே

கூட்டி நடந்தாளாம்
கொம்பனையா வள்ளியம்மை
தண்ணி குடிக்கையில தாத்தா
தடுமாறி விழுந்தது போல்

ஆட்டங்கள் ஆடி சுப்பையா
ஆரணங்கை கூவினாராம்
ஏதோ சிரமமென்று
எடுத்தணைத்தா வள்ளியம்மை

கன்னியவள் கை கொடுத்தாள் சுப்பையா
கட்டி அணைத்தாராம்
தோகையவள் கை கொடுத்தாள் சுப்பையா
தோளோடணைத்தாராம்

காட்டிலே வாழுகின்ற
கன்னி வள்ளிநாயகிக்கு
எதைக் கண்டா பயமென்றார்
ஏந்திழையா வள்ளியவள்

கரடி புலி சிங்கமென்றால்
கடுகளவும் பயமறியாள்
ஆனையென்று சொன்னாக்க
அதிகப் பயமுண்டு

கொடி படர்ந்த வள்ளியர்கு சுப்பையா
கொண்டு வந்தார் வெள்ளானை
காட்டானை காட்டி சுப்பையா
கலியாணம் செய்து கொண்டார்

கிள்ளு வளையலிட்டு சுப்பையா
கிளிமொழியை மாலையிட்டார்
அடுக்கு வளையலிட்டு சுப்பையா
ஆரணங்கை மாலையிட்டார்
பச்சை வளையலிட்டு
பசுங்கிளியை மாலையிட்டார்

அண்ணாவைத் தான் நினைந்து சுப்பையா
ஆரணங்கை மாலை கொண்டார்
கொண்டார் மனைவியாய்
கூட்டி வந்தார் தன்னருகே.