Thursday, May 7, 2009

சொக்கர் மீனாள் தாலாட்டு!

23

மதுரைக்கும் நேர்கிழக்கே
மழைபெய்யாக் கானலிலே
வெள்ளிக்கலப்பை கொண்டு சொக்கர்
விடிகாலம் ஏர்பூட்டி
தங்கக்கலப்பை கொண்டு சொக்கர்
தரிசுழுகப் போனாராம்

வாரி விதைபாவி
வைகை நதி தீர்த்தம் வந்து
அள்ளி விதைபாவி
அழகர்மலை தீர்த்தம் வந்து
பிடித்து விதைபாவி
பெருங்கடலில் தீர்த்தம் வந்து
எங்கும் விதைபாவி
ஏழுகடல் தீர்த்தம் வந்து
முத்து விதைபாவி
மிளகுச்சம்பா நாத்து நட்டு

பவளக்குடை பிடித்து சொக்கர்
பயிர்பாக்க போகையிலே
வங்காளஞ் சிட்டு
வயலிறங்கி மேய்ந்ததுன்னு
சிங்கார வில்லெடுத்து
தெறித்தாராம் அம்பினாலே

ஊசி போல் நெல் விளையும்
ஒரு புறமாய்ப்போறேரும்
பாசி போல் நெல் விளையும்
பட்டணம் போல் போரேறும்
சரஞ்சரமாய் நெல் விளையும்
சன்னிதி போல் போரேறும்
கொத்துக்கொத்தாய் நெல் விளையும்
கோபுரம்போல் போரேறும்

கட்டுக் கலங்காணும்
கதிர் உழக்கு நெல் காணும்
அடித்துபொலி தீர்த்த
அதுவும் கலங்காணும்
மூன்று கலங்காணுமின்னு சொக்கர்
முத்திரிக்கையடிச்சாரோ

அடுப்பு மொழுகி
ஐவிரலால் கோலமிட்டு
பானை கழுவி
பன்னீரால் உலை வைத்து
தங்க நெருப்பெடுத்து
தனி நெருப்பு உண்டு பண்ணி
பொன் போல் நெருப்பெடுத்து மீனாள்
பொறி பறக்க ஊதிவிட்டா

சம்பாக் கதிரடிச்சுச் சொக்கர்
தவிச்சு நிற்கும் வேளையிலே
வேரில்லாக் கொடிபிடுங்கி மீனாள்
தூரில்லாக் கூடைசெய்து
கூடையிலே சோறெடுத்து
குடலையில காயெடுத்து
சோலைக்கிளி போல மீனாள்
சோறுகொண்டு போனாளாம்

நேரமாச்சுதுன்னு சொக்கர்
நெல்லால் எறிந்தாராம்
கலத்திலிட்ட சோறுதன்னில்
கல்லோ கிடந்ததென்று சொக்கர்
கடுங்கோபம் கொண்டாராம்
வாரி எறிந்தாராம் சொக்கர்
வயிரமணிக் கையாலே

சோர்ந்து படுத்தாளாம் மீனாள்
சொக்கட்டங்காய் மெத்தையில
மயங்கி விழுந்தாளாம் மீனாள்
மல்லிகைப்பு மெத்தையில
வாரியெடுத்தாராம் சொக்கர்
வலதுபுறத் தோளணைய
ஏந்தி எடுத்தாராம் சொக்கர்
இடதுபுறத் தோளணைய

அழுத குரல்கேட்டு
அழகர் எழுந்திருந்து
வரிசை கொடுத்தாராம்
வையகத்தில் உள்ள மட்டும்
சீரு கொடுத்தாராம்
சீமையில உள்ள மட்டும்
மானா மதுரைவிட்டார்
மதுரையில பாதிவிட்டார்
தல்லாகுளமும்விட்டார்
தங்கச்சி மீனாளுக்கு
தளிகையில பாதிவிட்டார்

தங்கம் நறுக்கி
தமருவெட்டத் தூண் நிறுத்தி
வெள்ளி வளை பூட்டி
மேக வண்ணத் தொட்டி கட்டி
தொட்டி வரிஞ்சு கட்டி
துரை மகனை போட்டாட்டி
ஆட்டினார் சொக்கலிங்கம்
அயர்வு வரும்வரையில்
ஊட்டினார் பால் அமுதம்
உறக்கம் வரும்வரையில்
கட்டிலுக்குங்கீழே
காத்திருப்பாள் மீனாளும்
தொட்டிலுக்குங்கீழே
துணையிருப்பார் சொக்கலிங்கம்.