Tuesday, June 2, 2009

அதியமலை பொதியமலை

25

அதியமலை பொதியமலை
அகத்தீசர் ஆளும் மலை
கங்கை திரண்ட மலை
கிருபையுள்ள பொதியமலை

தேவர்களும் முனிவர்களும்
தேவ பூசை செய்யும் மலை
நாகமலை தோகைமலை
சுவாமி மலை சுற்றி வந்து

ஏழு மலை கழித்து
பழனி மலை போய்ச் சேர்ந்து
பார்வதியாள் பாலகனின்
பாதம் பணிந்து வந்தேன்

மலடி மனமுருக
பார்த்தவர்கள் நின்றுருக
கல்லுருகச் செம்புருக
கண்டார் மனமுருக

பச்சை நிற வள்ளியம்மை
பவழ நிறத் தெய்வானை
சோதி நிற வேலவரும்
சொல்லி வரம் தந்தாரோ

கட்டிக்கரும்பே...

24

கட்டிக்கரும்பே என்
கண்மணியே கண்ணுறங்கு
மாணிக்கத்தால் மாரகண்டி
வச்சிரத்தால் பொன் பதக்கம்

யாருக்கிடுவோமின்னு
தேடித் திரிகையில
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தவம் பெற்று வந்த கண்ணோ

கண்ணான கண்மணிக்கு
காது குத்த போறோமின்னு
பொன்னான மாமனுக்கு
போட்டோம் கடுதாசி

தட்டெரம்ப பொன் வாங்கி
தராசு கொண்டு நிறை நிறுத்து
அரும்பான மாலை கட்டி
அம்மான் அவசரமா வந்தாக

அத்திக்காய் வாளி செய்து
மலர்ந்த நல்ல சிமிக்கி செய்து
கோடி உடுத்தி காது
குத்துமென்பார் கண்மணிக்கு
ராராரோ ராரிரேரோ..