Wednesday, May 19, 2010

நாழிச்சிறு சலங்கை

32

நாழி சிறு சலங்கை
நல்லபவுன் பொன்சலங்கை

ஒழக்கு சிறு சலங்கை
ஒசந்த பவுன் பொன்சலங்கை

பதக்கு சிறு சலங்கை
பழைய பவுன் பொன்சலங்கை

வெள்ளி சிறு சலங்கை
வெலை மதியா வீரதண்டே

சொல்லிச் சமையுதங்கே
சோழரோட வீரதண்டே

பண்ணிச் சமையுதங்கே
பாண்டியனார் வீரதண்டே

ஆருக்கிடுவோமுன்னு
தேடித்திரிகையிலே

எனக்கிடுங்கள் என்று சொல்லி
எதிர் கொண்டு வந்தா(ளோ)னோ

தனக்கிடுங்கள் என்று சொல்லி
தானோடி வந்தா(ளோ)னோ

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ

Tuesday, April 20, 2010

சங்கு முழங்க...

31

சங்கு முழங்க என் கண்ணே
சமுத்திரத்தில் மீன் முழங்க

எங்கே முழங்குதுன்னு சாமி
ஏணி வச்சு பார்த்தாராம்

அடிக்கரும்பை வெட்டி
நடுக்கடலில் வில்லூணி

கருங்கடலில் வில்லூணி
கணபதியை கை தொழுது

செங்கடலில் வில்லூணி
சிவனாரை கை தொழுது

ராராரோ ராராரோ
ராரிரேரோ ராராரோ

வள்ளியம்மை தெய்வானை
மாறாத சண்டையினால்

தெய்வானை ஓடி வந்து
சீவிலியை சாட்சி வச்சா

வள்ளியம்மை ஓடி வந்து
மயில்தனையோ சாட்சி வச்சா

ஏங்கானூம் வேலவரே
இந்த மதி உந்தனுக்கு

தேம்பி அழுதாளாம்
தேன்மொழியால் தெய்வானை

போங்கானும் வேலவரே
பொன்மலைக்கு அப்பாலே

பொங்கி அழுதாளாம்
பூங்கொடியாள் வள்ளியம்மை

கல்லுமலைக்குள்ளிருந்து
கதிர்வேலர் ஓடி வந்தார்

கடுகளவும் பயம் வேண்டாம்
காத்திடுவேன் உங்களையே!

கண்ணான கண்ணே என்
கண்மணியே கண்ணுறங்கு

ராராரோ ராராரோ
ராரிரேரோ ராராரோ

Wednesday, April 14, 2010

நீண்ட வருடங்கள் கழித்து பிறந்த பிள்ளைக்கு

30

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிராரோ ராராரோ
எங்கிருந்தான் எங்கிருந்தான்
இது நெடுநாள் எங்கிருந்தான்

மாசி மறஞ்சிருந்தான்
மழமேகம் சூழ்ந்திருந்தான்
திங்கள் மறஞ்சிருந்தான்
தேவாக்கள் கூடருந்தான்

சிவனோடருகிருந்தான்
தேடியதால் இங்கு வந்தான்
மகாதேவர் கூடருந்தான்
மனவருத்தங்கண்டு வந்தான்

எங்கள் குடி மங்காகும்
எதித்த குடி ஏசாகும்
தங்கமணி பொற்கதவை
தாழ்திறக்க வந்தானோ

தாளால் கடுதாசி
தங்கத்தால் மைக்கூட்டு
பேனா புடிச்செழுத தம்பி
பொறந்து வந்த புனக்கிளியோ

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ

Thursday, October 1, 2009

அம்மானார் எல்லையிலே ..

29

அம்மானார் எல்லையிலே
என்னவச்சா தோப்பாகும்

வச்ச பயிர் வளரும்
வாழைவச்சாத் தோப்பாகும்

சேத்த பயிர் வளரும்
தென்னைவச்சாத் தோப்பாகும்

தொட்ட எடந்தொலங்கும்
தோ..ட்டம் பயிராகும்

தென்னையும் வாழையும்
சேத்துவச்சாத் தோப்பாகும்

வாழையும் தென்னையும்
வாங்கிவச்சாத் தோப்பாகும்

இஞ்சி பயிராகும்
எலுமிச்சை தோப்பாகும்

மஞ்சப் பயிராகும்
மாதுளையும் தோப்பாகும்

ஏலக்கா.. காய்க்கும்
இரு..நூறு பிஞ்சுவிடும்

சாதிக்கா காய்க்கும்
தாய்மாமன் எல்லையில

வாழை இலை போட்டு
வந்தாரை கையமத்தி

வருந்தி விருந்துவைக்கும்
மகராசா பேர..னோ

தென்னை இலை பரப்பி
சென்றாரை கையமத்தி

தே..டி விருந்து வைக்கும்
திசை கருணர் பேரனோ.

ராராரோ ராரிரரோ
என் கண்ணே
ராரிரரோ ராராரோ.

Thursday, September 24, 2009

கற்பகத்தைத் தேடி...

28

ராராரோ ராரிரரோ
என்கண்ணே
ராரிரரோ ராராரோ

கற்பகத்தைத் தேடி காண
வரும் போது என் கண்ணே
உன்னரிய அம்மானும்
என்ன கொண்டு வந்தாக..

கொத்துவிடா நெத்தும்
கோதுபடா மாங்கனியும்
கோடைப் பலாச்சுளையும்
குலை சேர்ந்த மாங்கனியும்
பருவப் பலாச்சுளையும்
பக்குவமா மாங்கனியும்
அக்கரையிச் சக்கரையும்
அதிமதுர தென்னவட்டும்..

காச்சிய பாலும்
கல்கண்டும் செந்தேனும்
ஏலங்கிராம்பும் இளம்
கொடிக்கா வெத்திலையும்
சாதிக் களிப்பாக்கும்
சங்குவெள்ளைச்
சுண்ணாம்பும்..

அத்தனையும் கொண்டு
அறிய வந்தார் அம்மானும்
பழ வருக்கம் கொண்டு
பாக்க வந்தார் அம்மானும்
ராராரோ ராரிரரோ
என்னய்யா
ராரிரரோ ராராரோ

Thursday, July 9, 2009

மதுரை இரு காதம்

27

மதுர இரு காதம்
வாழ் மதுர முக்காதம்
அம்பத்தாறு தேசம்
ஆள வந்த சீமானோ

பாட்டனாராண்ட
பதினெட்டு ராச்சியமும்
நாட்டமுடன் ஆள வந்த
ராசாவோ எங்களய்யா(ராராரோ)

வெள்ளி வளை பூட்டி
விசாலமா தொட்டி கட்டி
தங்க வளை பூட்டி
சதுரலங்கா(ய்)த் தொட்டி கட்டி

பச்சை இலுப்ப வெட்டி
பால் வடிய தொட்டி கட்டி
தொட்டியில அட்டணக்கா(ல்)
தூங்குறது யாரு மகன்

இன்னார் மகனோ
இனியார் மருமகனோ
தனதாய் விளையாட
தவம் பெற்று வந்தவனோ

ராராரோ ராரிரரோ
என்னய்யா
ராரிரரோ ராராரோ

Thursday, July 2, 2009

பிள்ளைக் கலி தீர்த்த..

26

ராராரோ ராரிரரோ
என்(கண்ணே)னய்யா
ராரிரரோ ராராரோ
பிள்ளைக் கலி தீர்த்த
பெருமானும்(பெருமகளும்)நீதானோ
மாம்பழத்தைக் கீறி
வயலுக்குரம் போட்டு
வெள்ளித்தேர் பூட்டி
மேகம்போல் மாடுகட்டி
அள்ளிப் படியளக்கும்
அதிட்டமுள்ளோர்(புத்திரியோ)புத்திரனோ
வாரிப் படியளக்கும்
மகிமையுள்ளோர் புத்திரனோ
சேற்றிலொரு செங்கழுநீர்
திங்களொரு பூப்பூக்கும்
நூற்றிலொரு பூவெடுத்து
முடிப்பார்(மகளோ)மகனோ நீ
ராராரோ ராரிரரோ
என்னய்யா(என்னாத்தா)
ராரிரரோ ராராரோ