Friday, March 20, 2009

வள்ளி தாலாட்டு 2

குமரக்கிழவர்!

நல்ல கிழவனைப்போல் சுப்பையா
நடிச்சாராம் தினைப்புனத்தே
மெத்தப் பசிக்கிதுன்னு சுப்பையா
வித்தை பல செய்தாராம்

தேனும் தினைமாவும் வள்ளி
சேத்துக் கொடுத்தாளாம்
தாகமெடுக்குதுன்னு சுப்பையா
சாலங்கள் செய்தாராம்

தேன் குடிக்கத் தந்தாளாம்
தேன்மொழியா வள்ளியம்மை
அதையும் குடிக்காம சுப்பையா
அழைச்சாராம் சுனையருகே

கூட்டி நடந்தாளாம்
கொம்பனையா வள்ளியம்மை
தண்ணி குடிக்கையில தாத்தா
தடுமாறி விழுந்தது போல்

ஆட்டங்கள் ஆடி சுப்பையா
ஆரணங்கை கூவினாராம்
ஏதோ சிரமமென்று
எடுத்தணைத்தா வள்ளியம்மை

கன்னியவள் கை கொடுத்தாள் சுப்பையா
கட்டி அணைத்தாராம்
தோகையவள் கை கொடுத்தாள் சுப்பையா
தோளோடணைத்தாராம்

காட்டிலே வாழுகின்ற
கன்னி வள்ளிநாயகிக்கு
எதைக் கண்டா பயமென்றார்
ஏந்திழையா வள்ளியவள்

கரடி புலி சிங்கமென்றால்
கடுகளவும் பயமறியாள்
ஆனையென்று சொன்னாக்க
அதிகப் பயமுண்டு

கொடி படர்ந்த வள்ளியர்கு சுப்பையா
கொண்டு வந்தார் வெள்ளானை
காட்டானை காட்டி சுப்பையா
கலியாணம் செய்து கொண்டார்

கிள்ளு வளையலிட்டு சுப்பையா
கிளிமொழியை மாலையிட்டார்
அடுக்கு வளையலிட்டு சுப்பையா
ஆரணங்கை மாலையிட்டார்
பச்சை வளையலிட்டு
பசுங்கிளியை மாலையிட்டார்

அண்ணாவைத் தான் நினைந்து சுப்பையா
ஆரணங்கை மாலை கொண்டார்
கொண்டார் மனைவியாய்
கூட்டி வந்தார் தன்னருகே.

Wednesday, March 4, 2009

வள்ளி தாலாட்டு!

21.

வள்ளி பிறந்தது!

வள்ளியென்றால் வள்ளி
மலைமேல் படரும் வள்ளி
வள்ளிக்கொடியருகே மான்
கன்று போட்டதென்று!
கொடியில் கிடந்த பிள்ளை
கூவி அழும் போது
வனத்துக்குறவர்களாம்
மான் பிடிக்கும் வேடர்களாம்
குழந்தை குரல் கேட்டு
குறவேடர் ஓடி வந்தார்
மதலை குரல் கேட்டு
மான் வேடர் ஓடிவந்து
வாரி எடுத்து வன்ன மடியில்
வைத்து
தூக்கி எடுத்து சொர்ண மடியில்
வைத்து
மண் துடைத்து மடியில்
வைத்து
வள்ளி என்று பேரும்
வைத்து
வளர்த்தார் வனந்தனிலே!

வனங்காத்தது

காடு வெட்டி தீக்கொளுத்தி
மேடு பள்ளம் செப்பனிட்டு

தின்னத் தினை விதைத்து வள்ளி
தேன்மொழியை காவல் வைத்தார்!
அறுக்கத் தினை விதைத்து வள்ளி
அருங்கிளியைக் காவல் வைத்தார்!

உழக்குத்தினை விதைத்து வள்ளி
உத்தமியை காவல் வைத்து
ஓடி கிளி விரட்டி!
நாழித்தினை விதைத்து வள்ளி
நாயகியை காவல் வைத்து
நடந்து கிளி விரட்டி!
குறுணித்தினை விதைத்து வள்ளி
கொம்பனையை காவல் வைத்து
கூவி கிளி விரட்டி!
பதக்குத்தினை விதைத்து வள்ளி
பைங்கிளியை காவல் வைத்து
பாடிக்கிளி விரட்டி!
ஆலோலம் என்று சொல்லி வள்ளி
அழகாய் கிளி விரட்டி!
அறுக்கப் பதமாச்சே வள்ளி
அருங்கிளியாள் காத்த தினை!
கொய்யப் பதமாச்சே வள்ளி
கொம்பனையாள் காத்த தினை!

தேடி வந்தார் முருகர்!

சுப்பையா உந்தனுக்கு
தோதான வள்ளியவள்!
சண்முகா உந்தனுக்கு
சரியான வள்ளியவள்!
வீணை கொண்ட நாரதரும்
வேலவர்க்கு சொல்லி விட்டார்!

வள்ளிமான் வந்ததென்று சுப்பையா
வந்தார் வனந்தனிலே!
புள்ளிமான் புகுந்ததென்று சுப்பையா
புகுந்தார் தினைப்புனத்தே!

தினைப்புனமும் காத்து வள்ளி
திகைத்து நிற்கும் வேளையில
வனத்திருக்கும் வேடரைப்போல் சுப்பையா
வந்தாராம் மாலையிட!
தேனும் தினைமாவும்
தெவிட்டாத வேலவரும்
பாலும் தினைமாவும்
பசியார வந்தாராம்!

வெள்ளிமலை தெற்கே
விறலிமலை தென்மேற்கே
கல்லுமலைக்குள்ளிருந்து
கதிவேலர் ஓடிவந்து
வள்ளிதனை மாலையிட
வந்தார் வனத்தினுள்ளே!

வேடமிட்டு வந்த வேலவர்!

வண்டாடப் பூ மலர வள்ளி
வனங்காக்கக் கண்டாரோ!

வள்ளி அழகுக்கும் வள்ளி
வலது கையி தேமலுக்கும்
கன்னத்து மஞ்சளுக்கும் சுப்பையா
கண்டாசை கொண்டாராம்!
உட்கழுத்து மஞ்சளுக்கு சுப்பையா
உள்ளாசைப்பட்டாராம்!
கூந்தல் அழகுக்கு சுப்பையா
குறவேசம் ஆனாரோ!

ஓடினாள் வள்ளி
ஒளிந்தாள் வனந்தேடி!
தேடினார் வேல் முருகர் வள்ளி
திருவடியைக்காணாமல்!
வருந்தினார் முருகர் வள்ளி
வடிவழகைக் காணாமல்!

-தொடரும்!

Tuesday, March 3, 2009

அய்யா நீ அழுத கண்ணீர்

20

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ

அய்யா(ஆத்தா)நீ அழுத கண்ணீர்
ஆறாகப்பெருகி
ஆனைகுளித்தேறி
குளமாகத்தேங்கி
குதிரை குளித்தேறி
வாய்க்காலாய் ஓடி
வழிப்போக்கர் வாய் கழுவி
இஞ்சிக்கு பாஞ்சு
எலுமிச்சை வேரோடி
மஞ்சளுக்கு பாஞ்சு
மருதானி வேரோடி
தாழைக்கு பாய்கையிலே
தளும்பியதாம் கண்ணீரும்!
வாழைக்கு பாய்கையிலேயே
வத்தியதாம் கண்ணீரும்!

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ