Wednesday, November 19, 2008

வைகை பெருகி ..

19

வைகை பெருகி வர
வார்ந்த மணல் ஊர்ந்து வர

ஊறி வந்த தண்ணியிலே(கண்ணே)நீ
ஒட்டி வந்த கட்டி முத்தோ

பெருகி வந்த தண்ணியிலே நீ
பின்னணைந்த சந்தனமோ

சந்தணமோ என் பொருளோ நீ
சாமி தந்த தவப்பயனோ

கொட்டி வைத்த முத்தோ நீ
குவிந்த நவ ரத்தினமோ

கட்டிக் கரும்போ நீ
காணிக்கை ஆணி முத்தோ

முத்தில் ஒரு முத்தோ நீ
முதிர விளைந்த முத்தோ

தேற விளைந்த முத்தோ நீ
தில்லைக் குகந்த முத்தோ

ஆயிரம் முத்திலே நீ
ஆராய்ந்தெடுத்த முத்தோ

தொண்ணூறு முத்திலே நீ
துணிந்தெடுத்த ஆணி முத்தோ!

ஆணிப்பெரு முத்தோ நீ
அய்யாக்கள் ஆண்ட முத்தோ

பாண்டி பெருமுத்தோ நீ
பாட்டன்மார் ஆண்ட முத்தோ

முத்தானோ முத்தோ நீ
மூவாக்கள் ஆண்ட முத்தோ!

முத்தோ பவழமோ நீ
முன் கைக்கு பொன் காப்போ!

கோர்த்த நல் முத்தோ நீ
குறத்தி கையில் தாழ் வடமோ!

சாலை வழியுறங்க..

18

சாலை வழியுறங்க
சமுத்திரத்தில் மீனுறங்க
நாடெல்லாம் தூங்க
நடுக்கழனி நெல் தூங்க
பாலில் பழந்தூங்க
பாதி நிலா தான்தூங்க

உன்னுறக்கம் நீ கொள்ள
உத்தமியா(ள்) தாலாட்ட
பொற்கொடியா(ள்)தாலாட்ட
புத்திரனே நித்திரை செய்
மங்கையர்கள் தாலாட்ட
மகராசா நித்திரை செய்!
கண்ணே என் கண்மணியே
கற்பகமே நித்திரை செய்
நித்திரையும் போவாயாம்
சித்திரப் பூந்தொட்டிலிலே!(ராராரோ..)

நாழிச்சிறு சலங்கை...

17

நாழிச்சிறு சலங்கை
நல்ல பவுன் பொற்சலங்கை
உழக்குச்சிறு சலங்கை
ஒசத்தியுள்ள பொற்சலங்கை
ஆருக்கு இடுவமுன்னு
தேடித்திரிகையிலே
எனக்கிடுங்கள் என்று சொல்லி
எதிர் கொண்டு வந்தவனோ!
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தானாக வந்தவனோ!

மாசில்லா முத்தோ
மணி வயிரத்தோளானோ!
கல்விக்களஞ்சியமோ
கற்றோர்க்கு தாயகமோ!

செல்வ திருவிளக்கோ
செம்பொன் சுடரொளியோ!
தூண்டா மணிவிளக்கோ
சோதி சுடரொளியோ!

கண்ணில் உறுமணியோ
கலிதீர்த்த பெட்டகமோ!
பொன்னில் உறுமணியோ
பூவிலுறும் வாசனையோ!
கொடிக்கால் மருக்கொழுந்தோ
கோதை கையில் பூச்சரமோ!

சீரங்கம் ஆடி..

16

சீரங்கம் ஆடி திருப்பார் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரை கடலாடி
சங்கு முகமாடி சாயா வனம் பார்த்து
முக்குளமும் ஆடி
முத்திபெற்று வந்த கண்ணோ
திங்கள்தனைப் பணிந்து திருக்கேசுரம் ஆடி
தைப்பூசம் ஆடி
தவம் பெற்று வந்த கண்ணோ!
வாடிய நாளெல்லாம் வருந்தி தவமிருந்து
தேடிய நாள் தன்னில்
செல்வமாய் வந்த கண்ணோ!

Tuesday, November 4, 2008

யாரடிச்சார்..

15

ராராரோ ராரிரரோ
ராரிரேரோ ராராரோ

யாரடிச்சார் ஏனழுதாய்
அடிச்சாரச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
கடிஞ்சார சொல்லியழு

மாமனடிச்சானோ
மல்லிகப்பூ செண்டாலே
அத்தையடிச்சாளோ
அமுதூட்டும் கையாலே (ரா..)

அடிச்சாரை சொல்லியழு
ஆக்கினைகள் செய்துவைப்போம்
தொட்டாரைச்சொல்லியழு
தோள்விலங்கு போட்டுறுவோம்

வெண்ணையில விலங்குசெய்து
வெயிலிலே போட்டுறுவோம்
மண்ணால விலங்கு செய்து
தண்ணியில போட்டுறுவோம் (ரா..)

கொப்புக்கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய

விளக்கிலிட்ட வெண்ணையபோல்
வெந்துருகி நிக்கயில
கலத்திலிட்ட சோறது போல்
கண் கலக்கந்தீர்த்தாயே! (ராராரோ..)