Friday, May 23, 2014

...அங்கே தெரியுது பார்...


39

ராராரோ! ராரிரரோ
என் கண்ணே! ராராரோ! ராரிரரோ.....

மதலை சிறு குழந்தை என் கண்ணே
உன் மாமன்மார் வீடு எங்கே!

அங்கே தெரியுது பார் என் கண்ணே
ஆயிரம் கால் கல் தூணு!

தங்கத்தில் கால் நிறுத்தி என் கண்ணே
தாமரையால் பந்தலிட்டு!

வெள்ளியில் கால் நிறுத்தி என் கண்ணே
வெற்றிலையால் பந்தலிட்டு!

உன் பந்தலுக்கே வந்தாராம் என் கண்ணே
பாண்டியராம் உன் மாமன்!

குளிக்கக் கிணறுவெட்டி, என் கண்ணே
கும்பிடவோ சிலை எழுப்பி!

தண்ணிப் பந்தல் கட்டி என் கண்ணே
தாகம் தணியவச்சார்!

பள்ளிக் கூடம் கட்டி  என் கண்ணே
படிக்கவச்சார் உன் மாமன்!

வெள்ளி விளக்கெரியும் என் கண்ணே
உன் வெண் கொலுசு ஓசையிடும்!

தங்க விளக்கெரியும் என் கண்ணே
உன் தாய் மாமன் வாசலுல!

கண்ணே என் கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ராராரோ... ராரிரரோ...என் கண்ணே... ராராரோ...







Thursday, September 9, 2010

காடு வெட்டி நாடாக்கி...

38

ராராரோ ராராரோ
ராரி ரேரோ ராராரோ

காடு வெட்டி நாடாக்கி
கழனியெல்லாம் கதிராக்கி

நாடுபெற்று வருவார்கள்
ராசாவோ உங்களய்யா

வெற்றி பெற்று வருவார்கள்
வீமரரோ உங்களய்யா

செம்பொன் வெட்டி தூண் நிறுத்தி
சீனி கொண்டு கால் நாட்டி

கம்ப மகள் சேனையர்க்கு- என் அய்யா நீ
கைக்குதவ வந்தவனோ

கொம்பனையா வாசலுக்கு என் அய்யா நீ
கொண்டுவிக்க வந்தவனோ

கண்ணான கண்ணே
கண்மணியே கண்ணுறங்கு

ராரா ரோ! ராரி ரரோ!
ராரி ரரோ! ராரா ரோ!

Tuesday, August 10, 2010

ராராட்டத் தூணசைய...

37

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிரேரோ ராராரோ

ராராட்டத் தூணசைய
ராமர் கையில் அம்பசைய

அம்பு முழுதசைய
ஆளப்பிறந்தவனோ

வில்லு முருகசைய
விளங்கப்பிறந்தவனோ

சங்கு முழங்க சமுத்திரத்தில்
மீன் முழங்க

எங்கும் முழங்கவென்று
எழுந்தருளி வந்தவனோ

சரியாய் முழங்கவென்று
தாயிடத்தில் வந்தவனோ

பிள்ளைக்கலி தீர்க்க வந்த
பெருமானும் நீ தானோ

மனக்கவலை தீர்க்க வந்த
மாமணியும் நீதானோ

எங்கள்குறை தீர்க்க வந்த
இந்திரனும் நீ தானோ

ராராரோ! ராரிரரோ!
ராரிரரோ! ராரோ!




Monday, July 26, 2010

ஏலம்பூ வாய் நோக..

36

ராரா.. ரோ ராரா.. ரோ 
ராரி.. ரேரோ...  ராரா ..ரோ.. 

ஏலம்பூ வாய் நோக  
ஏனழுதான் என்னரியான்

பாலுக்கழுதானோ
பவள வாய் பொன் சொரிய

தேனுக்கழுதானோ
செம்பவள வாய் நோக

கரும்புக்கழுதானோ
கற்கண்டு வாய்நோக

அரசோ நவமணியோ
உன் அங்கமெல்லாம் தங்க மயம்

கனிமொழிந்த வாயாலே
உன் கண்ணிலிட்ட மை கரைய

ஆளப்பிறந்தவனே அழுகிறதும்
உன் முறையோ

அழுதால் அமுதுண்கான்
ஆட்டினால் கண் துஞ்சான்

மசன்டையில அமுதிடுங்கள்
மகராசா பேரனுக்கு

பகலோடு அமுதிடுங்கள்
பாண்டியனார் பேரனுக்கு

பொழுதோடு அமுதிடுங்கள்
புண்ணியவார் பேரனுக்கு

தாங்கத் தடுக்கிருக்கு உனக்கு
தங்கத்தால் ஆன தொட்டில்

ஏந்தத் தடுக்கிருக்கு உனக்கு
ஏந்திழையார் தாலாட்ட

கண்ணோ கமலப்பூ
உன் காதிரண்டும் தாமரப்பூ

மேனி மகிழம்பூ என் கண்ணே
மெல்ல நீ  கண்ணுறங்கு

ராரோ  ராரோ என் கண்ணே
ராரி ராரோ ராரோ

Thursday, July 15, 2010

அச்சடிக்கப்பொன் விளைய...

35

ராராரோ ராராரோ என்னய்யா
ராரிரேரோ ராராரோ

அச்சடிக்கப்பொன் விளைய
ஆதிச்சார் உன் தேசம்
வைத்திருக்கத் தந்தமகன்
நீ.. ஆளுவாய் நூறு குடி

பூப்பூத்த கோயிலிலே
பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான்
மாலைக்கழுதாயோ

ஆறாரும் அந்தணரும்
அப்போ வருங்கிளையும்
தாயாரும் சேனைகளும்
தழைக்கவென்று வந்தாயோ!

பெத்தாரும் சேனைகளும்
பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும்
மகிரவென்று வந்தாயோ!

செம்பொன் நல்ல தேரேறி
சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில்
வருவார் மருமகனோ (ராராரோ…)

Monday, July 12, 2010

தேனோ திரவியமோ...

34.

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ

தேனோ திரவியமோ
தெவிட்டாத தெள்ளமுதோ

கட்டிக்கரும்போ
கற்கண்டோ சக்கரையோ

மாசி வடுவோ
வைகாசி மாம்பழமோ

கோடைப்பலாச்சுளையோ
குலை சேர்ந்த மாங்கனியோ

கொஞ்ச வந்த ரஞ்சிதமோ
குறையில்லா சித்திரமோ

சங்கரா உன் காவல்
சங்கடங்கள் நேராமல்

சாத்தையா உன் காவல்
காத்திடுவாய் எங்கள் குலம்

வேலவா உன் காவல்
வேறு வினை வாராமல்

சொக்கையா உன் காவல்
சொப்பனங்கள் தட்டாமல்

கருப்பையா உன் காவல்
கண்ணேறு வாராமல்

கண்ணேறு வாராமல்
கற்பூரம் சுத்திடுங்கள்

வெண்ணீறு இட்டிடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி சுத்த

சுண்ணாம்பும் மஞ்சளுமாய் திட்டி
சுத்திடுங்கள் சுந்தரர்க்கே

Sunday, June 13, 2010

தூங்காத கண்ணுக்கு

33.

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ

கண்ணுக்கோ கண்ணெழுதி
கடைக்கண்ணுக்கோ மையெழுதி

தூங்காத கண்ணுக்கு
துரும்புகொண்டு மையெழுதி

உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி

அன்னம் எழுதி என் கண்ணே
அதன் மேல் புறாவெழுதி

தாரா எழுதி என் கண்ணே
தாய் மாமன் பேரெழுதி

கொஞ்சு கிளியெழுதி என்கண்ணே
குட்டி அம்மான் பேரெழுதி

அஞ்சு கிளி எழுதி என்கண்ணே
அய்யாக்கள் பேரெழுதி

பச்சைக் கிளி எழுதி என் கண்ணே
பாட்டன்மார் பேரெழுதி

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிராரோ ராராரோ…